Search This Blog

Monday, August 20, 2012

முதல் சந்திப்பு !!


உனக்கும் எனக்குமான - நம்
காதல் பிறந்த வேளையில் - ஒரு
உலகம் காணாமல் போனது நம்மோடு !!
நட்பிளகி, கசிந்துருகி காதலான பின்னரான
முதல் சந்திப்பில்
முகம் பார்க்காமல்
சேர்ந்து நடக்க ஆரம்பித்து
உளறல் பேச்சோடும்
வெட்கம் சிறிதோடும்
கொஞ்சம் படபடப்பில்
வானம் நட்சத்திரம் ஆராய்ந்து
சாலை தூரம் அளந்து
அனிச்சையாய் தலைகுனிந்து
கைகோர்க்கும் இச்சை அடக்கி
கடிகார நேரம் கரைத்து
கரையும் நேரத்தை கடிந்து
உள்ளூர நான் தவித்துக் கொண்டிருக்கையில்
விரல்கள் உரசும் ஸ்பரிசம் உணர்ந்து
உன்னை நோக்கி என் முகம் திருப்பி
கள்ள சிரிப்போடு
"என்னையும் கொஞ்சம் பாரு" என்றபோது
என்னை முழுதாய் கொட்டி வைக்க
தோதாய் அமைந்தவன் நீ ஆனாய் !!

Monday, February 13, 2012

மயக்கம் என்ன?!?!



யாருமற்ற நடுமுற்றத்தில்
அவசரமாய் நானறியாமல்
கன்னத்தில் நீ பதிக்கும் கள்ளத்தனங்களால்
வெட்கச்சிதறல் தனை மறைக்க
விரல் நகம் உடைக்க முற்படுகிறேன் நான் !!
சட்டென திரும்பி ஒன்றுமறியா வாக்கில்
சிரித்தபடி செல்லும் உன் சகஜங்களில்
எனக்கான காதலை காட்டிச்செல்கிறாய் நீ !!
இத்தனை நாளாய் சிரமமான பிராயத்தனங்களால்
மறைத்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த - என்
வெட்கம் வெளிக்கொணர்ந்த கோபத்தில்
என் இயலாமை மறைக்க
தடுமாற்றமில்லாதது போல் நடிப்பதாய் நினைத்து
பின்னாலிருந்து உன் சட்டை பிடித்திழுத்து
உனக்கான காதலை அவிழ்க்கிறேன் நான் !!
இருக்கும் இடைவெளியில்
உன் வெப்பம் ஈர்த்து
உயிர் வாழும் என் குளிர் மூச்சுக்காற்று !!
இரவை முடித்து வைத்து
இன்றை தொடக்கி வைத்து
நாள் முழுதுக்குமான பரிவர்த்தனைகளில்
நான் கொஞ்சங்கூட அறியாமல்
நிதர்சனமாய் நிறைந்திருக்கிறாய் நீ !!
எதிலும் உன்னை நினைவூட்டும்
நானறியா என் இயல்பு !!
என்னை பறைசாற்றும் அனைத்தும்
உன் சாயலிலேயே தோன்றி
பதுக்கி வைக்கப்படுகிறது எனக்குள் !!
இன்று வரையும் இறுதி வரையும்
என்னை இழுத்து பிடித்து
உன் பிடிக்குள் வைத்திருக்கிறது மாயக்காதல் !!